வ.உ. சிதம்பரனார், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, ஓட்டப்பிடாரம் என்னும் இடத்தில் 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் உலகநாதர் – பரமாயி அம்மாள் என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தார்.
வ.உ.சி – யின் தந்தை உலகநாதர், அப்போது இந்தியாவில் இருந்த மிகமுக்கியமான வழக்கறிஞர்களில் ஒருவர். இதுதான் வ.உ.சியையும் தனது கல்வி முடிந்து, தந்தையின் வழியில் செல்ல காரணமாக இருந்தது. வ.உ.சி ஒட்டப்பிடாரத்திலும் அருகில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்திலும் தனது பள்ளி படிப்பை நிறைவு செய்தார்.
பள்ளி படிப்பு முடிந்ததும் ஒட்டப்பிடாரத்தில் உள்ள மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஒரு சில ஆண்டுகள் வேலை செய்த பிறகு சட்ட கல்லூரியில் சேர்ந்து சட்ட படிப்பை படித்து முடித்தார்.
வழக்கறிஞர் வ.உ.சி :
தந்தை போலவே தானும் மிகச்சிறந்த வழக்கறிஞராக வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த வ.உ.சி-க்கும், அவரது தந்தையின் செயல்பாடுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. அவரது தந்தை சமுதாயத்தில் உள்ள பணக்காரர்கள் பிரச்சனைகளுக்கு மட்டுமே வாதாடுவார். ஆனால் வ.உ.சி அவர்கள் ஏழை மக்களின் மீது கொண்ட அனுதாபத்தின் காரணமாக, பல நேரங்களின் தனது தந்தையின் விருப்பத்திற்கு எதிராக வாதாடி இருக்கிறார்.
தனது சிறப்பான வாத திறமையினாலும் பல வழக்குகளில் சிறப்பாக வாதாடி வெற்றி கண்டதாலும் பலராலும் ஈர்க்கபட்டு மிகசிறந்த வழக்கறிஞர் என்ற பெயர் பெற்றார்.
திருமண வாழ்க்கை :
1895-ஆம் ஆண்டு வள்ளியம்மை என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட வ.உ.சி. ஆனால் அவர் 1900-ஆம் ஆண்டு தனது முதல் பிரசவத்தின் போது இறந்து விட்டார் அதன்பிறகு 1901-ஆம் ஆண்டு மீனாட்சி அம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்திய தேசிய காங்கிரஸ்-ல் வ.உ.சி :
அரசியல் மீது கொண்ட ஆர்வத்தால் 1905-ஆம் ஆண்டு தன்னை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டார்.
இந்தியாவில் சுதேசி இயக்கம் தலைதூக்கிய அந்த நேரத்தில், தலைவர்களான லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், போன்ற பலரும் ஆங்கிலேய வர்த்தக வற்புறுத்தலுக்கு முற்று புள்ளி வைக்க முயற்சி செய்து வந்தனர்.
அதே காரணத்திற்காகவும், இந்திய பாரம்பரிய கைத்தொழில்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அரவிந்தோ கோஷ், சுப்பிரமணிய சிவா, சுப்பிரமணிய பாரதி ஆகியோர் சென்னை மாகாணத்தில் இருந்து போராடினர்.
இதுதான் வ.உ.சியை இந்திய காங்கிரஸ் கட்சியில் சேரவும், சென்னை மாகாண உறுப்பினர்கள் உடன் இணைந்து போராடவும் தூண்டியது. அதன்பிறகு இந்திய தேசிய காங்கிரஸ் அமர்வின் சேலம் மாவட்ட அமர்வை தலைமை தாங்கினார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி:
அடுத்த கட்டமாக தமிழகம் – இலங்கை இடையிலான ஆங்கிலேய கப்பல் போக்குவரத்து கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினார். வ.உ.சியின் சுதந்திர போராட்ட முறை மற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் பாணியில் இருந்து மாறி காணப்பட்டது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கப்பல் விட்டதை வெறும் வணிகமாக அவர் பார்க்கவில்லை. கப்பலுக்காக தன் சொத்தை விற்று கடன் வாங்கி இரண்டு கப்பல்களுடன் கப்பல் போக்குவரத்தை இலங்கைக்கும் தூத்துகுடிக்கும் இடையில் தொடங்கினார்.
அதற்கு முன் ஆங்கிலேயர்கள் அந்த போக்குவரத்தை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூல் செய்து பெரிய லாபம் பார்த்துவந்தனர். வ.உ.சியின் “சுதேசி கப்பல்” வந்ததும் அது மக்களிடம் அதிக செல்வாக்கை பெற்று வளர்ந்தது. காரணம் வ.உ.சி ஆங்கியேலர்களை எதிர்த்து கப்பல் விட்ட தகவல் நாடு முழுவதும் காட்டு தீ போல பரவியது.
இதனால் ஆங்கிலேயர்களுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்ப்பட்டது. அது மட்டுமில்லாமல் கப்பலை வைத்து வ.உ.சி தூத்துக்குடி முழுவதும் சுதந்திர உணர்வை ஏற்படுத்தினார்.
அப்போது இருந்த திருநெல்வேலி ஆட்சியர் மேலிடத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் இந்த பகுதியில் குறிப்பாக வ.உ.சி கப்பல் போக்குவரத்தை தொடங்கிய பின்பு, மக்களிடையே சுதந்திர போராட்ட உணர்வு அதிகரித்துள்ளது, என்று தெரிவித்தார். அது ஆங்கிலேயர்கள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது.
சுதேசி கப்பல் :
வ.உ.சி கப்பல் போக்குவரத்தை ஒரு வணிகமாக மட்டும் பார்க்காமல் எதில் கைவைத்தால் ஆங்கிலேயனுக்கு வலிக்கும் என்பதை தெரிந்து வைத்திருந்தார். அவர்கள் வணிகம் செய்யத்தான் வந்தவர்கள் என்பதால் அவர்களின் வணிகத்தில் கைவைத்து அதில் இருந்து மக்கள் மத்தியில் சுதந்திர போராட்ட எண்ணத்தை ஊக்குவித்தார்.
ஆங்கியலேய அரசாங்கம் மற்றும் ஆங்கிலேய வியாபாரிகளின் கோபத்தை தாண்டியும் வ.உ.சி கப்பல்கள் தூத்துக்குடி கொழும்பு இடையில் வழக்கமான சேவையை தொடங்கியது. சுதேசி நிறுவனம் ஆங்கிலேயே கப்பல் நிறுவனத்துக்கு கடும் போட்டியாக உருவெடுத்தது.
ஆங்கிலேயர்கள் இந்த போட்டியை சமாளிக்க முடியாமல் கட்டணத்தை குறைக்க முடிவு செய்து சுதேசி கப்பல் கட்டணத்தை விட குறைவாக அறிவித்தனர். அதற்கு பதிலடி கொடுக்க வ.உ.சியும் தனது கட்டணத்தை மேலும் குறைத்தார்.
கடைசியில் ஆங்கிலேய கப்பல் கம்பனி பயணிகளை இலவசமாக அழைத்து செல்வதாக கூறி கூடுதலாக பயணிகளுக்கு குடைகளை பரிசாக வழங்கியது. வ.உ.சியால் இலவசமாக வழங்க முடியாததால் சுதேசி கப்பல் நிறுவனம் திவால் ஆகும் நிலைக்கு சென்றுவிட்டது.
சிறை வாழ்க்கை :
அதன் பிறகு நாட்டில் சுதேசி இயக்கத்தை விரிவாக்கவும் ஆங்கிலேயர்களின் தவறான வியாபார கொள்கையை மக்களுக்கு எடுத்து சொல்லவும், ஆங்கில அரசுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக திருநெல்வேலியில் உள்ள கோரல் மில்ஸ் தொழிலார்களை ஒன்று திரட்டினார்.
ஆங்கிலேய அதிகாரிகள் ஏற்கனவே அவர் மீது கொண்டிருந்த வெறுப்பினால், அரசுக்கு எதிராக செயல் படுவதாக குற்றம் சாட்டி, 1908 மார்ச் 12-ஆம் தேதி அவரை கைது செய்தனர்.
அவரை கைது செய்த பின்னர் நாட்டில் வன்முறை வெடித்தது அப்போது காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் வன்முறை ஏற்பட்டு நான்கு பேர் மரணம் அடைந்தனர்.
ஆங்கியேலர்கள் அவருக்கு எதிராக பொய் வழக்குகளை தயார் செய்து வந்த நிலையில் வ.உ.சிக்கு பெருமளவில் ஊடக ஆதரவு கிடைத்தது. இதனால் அவரை எப்படியும் வெளியில் கொண்டு வரவேண்டும் என்று பலரும் நிதி சேர்க்க ஆரம்பித்தனர்.
அப்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்த மகாத்மா காந்தியும், வ.உ.சியின் பாதுகாப்புக்காக நிதி சேகரித்து இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். கைதுக்கு பின் வ.உ.சி கோயம்பத்தூரில் உள்ள மத்திய சிறையில் ஜூலை 9, 1908 முதல் டிசம்பர் 1, 1910 வரை சிறை வைக்கப்பட்டார்.
செக்கிழுத்த செம்மல் :
அவரின் புரட்சிகரமான மனப்பான்மையை பார்த்த ஆங்கிலேயர்கள் அவருக்கு தெளிவாக ஆயுள் தண்டனை வழங்கினர்.
சிறைச்சாலையில் மாட்டிற்கு பதிலாக வ.உ.சியை செக்கு இழுக்க செய்து ஆங்கிலேயர்கள் அவர்க்கு சித்தரவை கொடுத்தனர். அதனால் அவருக்கு “செக்கிழுத்த செம்மல்” என்ற பெயரும் உண்டு.
இப்படி பல தொல்லைகளை சிறையில் அனுபவித்த போதும் அவர் சும்மா இருக்கவில்லை. தனது சட்ட மனுக்கள் மூலம் அவரது சுதேசி நடவடிக்கைகளை தொடர்ந்து வந்தார். மேலும் தனது சுயசரிதையையும் எழுத ஆரம்பித்தார்.
சிறையில் இருக்கும் போதே தத்துவ எழுத்தாளரான ஜேம்ஸ் ஆலன் அவர்களின் புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்தார். அதுமட்டுமில்லாமல் திருக்குறள், தொல்காப்பியம் போன்ற தமிழின் மிக முக்கியமான காவியங்களுக்கு விளக்க உரை எழுதி உள்ளார்.
இப்படி சிறையில் தனது கடின உழைப்பை வெளிப்படுத்தியதால் அது அவருடைய உடல்நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் ஆங்கிலேயர்கள் வ.உ.சியை விடுதலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.
அதன்படி டிசம்பர் 12 ,1912 அன்று அவரை விடுதலை செய்தனர். விடுதலைக்கு பின்பு சிறை வாசலில் பெரிய அளவில் தனது ஆதரவாளர்களின் கூட்டத்தை எதிர்பார்த்த வ.உ.சிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
வறுமை :
வழக்கறிஞர் உரிமம் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டதால் அவரால் தொடர்ந்து வாதிட முடியவில்லை. சுதேசி கப்பல் நிறுவனமும் 1911-இல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதால் மிக ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் குடியேறினார்.
அங்கு ஒரு மண்ணெண்ணெய் வியாபாரத்தை தொடங்கினார். ஆனால் அதில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இறக்க குணமும் தாராள மணமும் கொண்டவர்களால் எப்படி லாபம் தரும் வியாபாரத்தில் வெல்ல முடியும்.
அதன் பிறகு சென்னையில் இருந்த பல தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புக்கு தலைவரானார். பிறகு 1920-இல் இந்திய தேசிய காங்கிரசின் கொல்கத்தா அமர்வில் சேர்ந்தார்.
அரசியல் வாதியாகவும், வழக்கறிஞர் ஆகவும் மட்டும் இல்லாமல் சிறந்த அறிஞர் ஆகவும் விளங்கினார். சிறையில் இருக்கும் போது தனது சுயசரிதையை தொடங்கிய அவர் 1912-இல் சிறையில் இருந்து விடுதலை பெற்று அதனை முடித்தார் V.O.Chidambaram History in Tamil.
இறப்பு :
செல்வந்தரான குடும்பத்தில் பிறந்தும் வசதியான வழக்கை வாழாமல், சிறை, போராட்டம் என தன் வாழ்நாள் முழுவதும் இந்திய மக்களின் விடுதலைக்காகவே உழைத்த அந்த மாமனிதர் 1936, நவம்பர் 18-ஆம் நாள், தூத்துகுடியிலுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் அலுவலகத்தில் காலமானார்.