இந்தியாவின் இரும்பு மனிதர் திரு.சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 70வது நினைவு நாள் இன்று...தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக இந்தியாவை ஒருங்கிணைந்த நாடாக உருவாக்கிய அவரது தளராத முயற்சிகளுக்கு வணங்கி போற்றி நினைவு கூறுகிறோம்...!
வல்லபாய் படேல், 1875 ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் நாள், குஜராத் மாநிலம் கரம்சாத் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை சாவேரிபாய் படேல், ஒரு விவசாயி.1901-ஆம் ஆண்டு, "பாரிஸ்டர்" பட்டம் பெற இங்கிலாந்து சென்றவர், தாயகம் திரும்பி, அகமதாபத்தில் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு, குறுகிய காலத்தில், பிரபலமானார்.
ஆனால், காந்திஜியின் உரையைக் கேட்டவர், வழக்கறிஞர் தொழிலை உதறிவிட்டு, சுதேசி இயக்கத்தில் இணைந்தார்.குஜராத்தில், வரி விலக்கு கேட்டு விவசாயிகள் போராடினர். அப்போது, காந்தி, படேல் தலைமையில், வரி கொடா போராட்டம், தீவிரமானது.முடிவில், பிரிட்டிஷ் அரசு பணிந்தது. படேலின் முதல் வெற்றி இது.
வட்டமேஜை மாநாட்டுக்குப் பிறகு காந்தி, படேல் கைது செய்யப்பட்டனர். எரவாடா மத்திய சிறையில் இருந்தபோது இருவருக்கும் நெருக்கம் வளர்ந்தது. படேலின் ஆற்றலைப் பாராட்டிய காந்திஜி, அவருக்கு, 'சர்தார்' பட்டத்தை வழங்கினார்.1931-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராகப் படேல் பொறுப்பேற்றார்.
நாடு சுதந்திரம் பெற்றதும், சுதேச சமஸ்தானங்கள் யாருடன் வேண்டுமானாலும் சேரலாம் என்று, பிரிட்டிஸ்சார் அறிவித்தது எவ்வளவு பெரிய சவால் தெரியுமா? இதை சாதுர்யமாக கையாண்ட சாமர்த்தியம், படேலின் வலுவான முடிவுகளுக்கு பின் இருந்தது.
1947 - ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற போது, படேல் இந்தியாவின் துணைப் பிரதமரானார். அவரிடம் 'உள்துறை' ஒப்படைக்கப்பட்டது. அப்போது, பல்வேறு நெருக்கடிகளை படேல் எதிர்கொள்ள வேண்டியிருந்து. அவற்றை எல்லாம் தமது இரும்புக்கரம் கொண்டு அடக்கினார்.
துண்டு துண்டாக இருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்தது தான், உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி. அகண்ட பாரதம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும் இரும்பு மனிதராக நின்று சமாளித்தார்.
ஹைதராபாத் நிஜாம் அரசை ராணுவ நடவடிக்கைக்குப் பின்னரே, இந்தியாவுடன் இணைக்க முடிந்தது. பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சிக்கல் நீடித்தாலும், படேல் ஒரு சிறந்த ஆளுமைத்திறன் மிக்கவர் என நிரூபித்தார். இந்திய ஒருமைப்பாட்டைக் காக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளும் ஆற்றிய அரும்பணிகளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை.
பேச்சு, உடன்படிக்கை இல்லையேல் இரும்புக்கரம் என்று செயல்பட்ட இவருக்கும் நேருவுக்கும் கருத்து வேறுபாடு எழுந்தது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்ய நேரு விரும்பிய போது, படேல் மறுத்தார். 'ஆதாரம் வேண்டும்' என்றார்.
பிரிவினையால் பாதிக்கப்பட்ட மக்களை, தனியாக தங்க வைக்க வேண்டும் என்று நேரு விரும்பினார். மற்ற மக்களுடன் அவர்கள் இணைந்தே வாழ வேண்டும் என்றார் படேல். காங்கிரசிலேயே பெரும்பான்மையானோர், படேலை பிரதமர் ஆக, வற்புறுத்தினர்.
படேல் என்ன சொன்னார் தெரியுமா...? "நீங்கள் என் பக்கம் இருக்கலாம்; மக்கள் நேருஜி பக்கம் அல்லவா இருக்கின்றனர்" என்று கூறி, பிரதமர் பதவியை ஏற்க மறுத்தார்.சோமநாதர் கோயிலை மறு நிர்மாணம் செய்வதில் இவர் பங்காற்றினார்... நேருவுக்கு, அதிலும் வருத்தம் ஏற்பட்டது.
காந்தி, நேரு, படேல் என்ற வரிசையில் வைத்து, வரலாற்றில் மதிப்பிடப்பட்டார்.1950ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி தமது 75-ம் வயதில், படேல் இறந்தார். 1991-ல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.இந்தியா சுதந்திரம் பெற்ற இரண்டே ஆண்டுகள் தான் அவர் வாழ்ந்தார் என்பது, இந்த நாட்டுக்கு பேரிழப்பு தான்.