Success in my Habit

Sunday, November 1, 2020

தமிழ் நாடு தினம்


 உலக தமிழர்கள் அனைவருக்கும் !

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக தமிழ் நாடு தினம் நல்வாழ்த்துக்கள்!
"தமிழ் நாடு இது தான் எங்கள் தமிழகம்!உலகிற்கே ஒளியை ஏற்றி உயிர் கொடுக்கும் எங்கள் தமிழகம்!"

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம்” என்று தொல்காப்பியம் கூறியுள்ளது என்ற போதிலும், தமிழ்நாடு என்ற நிலப்பரப்பு முழுதாக எப்போதாவது ஒரே தமிழ் அரசனின் கீழ் ஆளப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு பதில் சொல்வது சிரமம். ஏனெனில், இது சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்கள் ஆண்ட பூமியாகும். அன்னியப் படையெடுப்புகளால் இந்த நிலப்பரப்பு கூறுபோடப்பட்டு, சிலகாலங்கள் சிலரால் ஆளப்பட்ட போதிலும் கூட, வேற்று மொழியினரான தெலுங்கர்கள், மராட்டியர்கள், சவுராஷ்டிரத்தினர் என பலர் வந்து குடியேறி ஆட்சி அதிகாரம் செய்த காலத்திலும் கூட, இந்த மண்ணில் வாழும் பூர்வகுடிகள் ‘தமிழ்நாடு’ என்ற உணர்வை ஒரு போதும் இழக்கவில்லை.



மொழிவாரி மாநிலங்கள் தேவையா? என்பதற்கு முதன் முதலாக எஸ்.கே.தார் கமிட்டி ஜூன் 1948-ல் அமைக்கப்பட்டது. அது தன் அறிக்கையை அதே ஆண்டு டிசம்பர் மாதம் சமர்ப்பித்தது. அதில், “மொழிவாரி மாநிலம் அவசியமில்லை. நிர்வாக வசதிக்கு ஏற்பத்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும்” என்று அது பரிந்துரைத்திருந்தது. காங்கிரஸ் கட்சிக்குள் இதற்காக உருவாக்கப்பட்ட ஜவகர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீதாராமையா என்ற மூவர் கமிட்டியும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தியது.

“இந்திய சுதந்திரத்திற்காக நாம் ஒன்றுபட்டு போராடினோம். அப்படி ஒன்றுபட்ட நாம் மொழிவாரியாக நம்மை ஏன் பிரித்துக் கொள்ளவேண்டும். மொழி உணர்வும், பிராந்திய உணர்வும் நம் ஒற்றுமையை குலைத்துவிடக்கூடாது. ஆகவே, இந்தியாவை நிர்வாக வசதி கருதி பிரித்து, அனைத்து பிரிவினரும் சமஉரிமை பெறும் வகையில் மாநிலங்களை உருவாக்கலாம்” என்றார் ஜவகர்லால் நேரு.

இந்த விஷயத்தில், சட்டமேதை அம்பேத்கரோ, “மொழிவாரி மாநிலம் என்பது தவிர்க்கமுடியாது. ஆனால், அதை முரட்டுத்தனமாகவோ, நிர்ப்பந்தமாகவோ உருவாக்கக் கூடாது. மொழிவாரியாக மாநிலங்களை பிரிப்பதில் சில ஆபத்துகளும் உள்ளன. மொழி உணர்வை கட்சிகள் அரசியல் ஆதாயங்களுக்கு பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. பிரிவினை உணர்வை தவிர்ப்பதற்கும், மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கும் ஒரு தேசிய மொழியை ஆட்சி மொழியாக்க வாய்ப்புள்ளதா..? என்று பார்க்கவேண்டும்.” என்றார்.

தேசத் தலைவர்களின் கருத்தும், அதைத் தொடர்ந்து தார் கமிட்டி பரிந்துரையும் தெலுங்கு பேசும் மக்களை கொந்தளிக்க வைத்தது. போட்டி ஸ்ரீராமுலு என்ற காந்தியவாதி ஆந்திர மாநில கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். 1952 ஜூன் 9-ல் ஆரம்பித்து செப்டம்பர் 15-ல் அவர் தன் உயிரை நீத்தார். அவரது உண்ணாவிரதமும், அதைத் தொடர்ந்த மரணமும் தெலுங்கு மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி, பல கலவரங்களுக்கு வித்திட்டது. கட்டுப்படுத்தவியலாத கலவரங்களையடுத்து, 1953 அக்டோபர் 1-ந்தேதி ஆந்திரா சுதந்திர இந்தியாவின் முதல் மாநிலமாக உண்டானது. இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பசல்அலி தலைமையில் மாநில மறுசீரமைப்பு கமிட்டியை பிரதமர் நேரு ஏற்படுத்தினார். இச்சூழலில், “மதராஸ் மனதே” என்ற கோஷத்தை எழுப்பி, “சென்னையை ஆந்திராவின் தலைநகராக்க வேண்டும்” என்றனர், தெலுங்கு மக்கள்!


ஆந்திரா கோரிக்கைக்கும் முன்பே 1938-லேயே சென்னை கடற்கரையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில், மறைமலையடிகள், தந்தை பெரியார், சோமசுந்தரபாரதியார் ஆகியோர் “தமிழ்நாடு தமிழனுக்கே” என்ற முழக்கத்தை எழுப்பி இருந்தனர். அதே காலகட்டத்தில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. தமிழ் மாநிலம் வேண்டும் என்று மாநாடுகள் நடத்தி வலியுறுத்தி வந்தார். ஆந்திரா உருவானதையடுத்து தமிழ்நாடு கோரிக்கையோடு சென்னையை காப்பாற்ற வேண்டிய அவசர அவசியமும் உண்டானது. “தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம்” என்ற முழக்கத்தை ம.பொ.சி. பிரபலப்படுத்தினார். ராஜாஜியோ, “சென்னையை ஆந்திராவிற்கு தந்துவிட்டால், அதற்கு ஒத்துழைப்பு தரும் சக்தி எனக்கில்லை. நான் ராஜினாமா செய்துவிடுவேன். நீங்கள் வேறு முதல்வரை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்” என்று நேருவிடம் கூறிவிட்டார். இதையடுத்து “சென்னையை ஆந்திராவிற்கு தரப்போவதில்லை” என நேரு பகிரங்கமாக அறிவித்தார்.

மொழிவாரி மாநில போராட்டத்தில் தெலுங்கு மக்கள் ‘விசால ஆந்திரா’ என்றும், கன்னட மக்கள் ‘அகண்ட கர்நாடகம்’ என்றும், மலையாளிகள் ‘ஐக்கிய கேரளா’ என்றும், மராட்டிய மக்கள் ‘சம்யுக்த மகாராஷ்டிரம்’ என்றும், குஜராத்தியினர் ‘மகா குஜராத்’ என்றும் கேட்டுப் போராடினர். மொழிவாரி மாநில அறிவிப்பு 1956 நவம்பர் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசங்களும் உருவானது. மற்ற மாநிலத்தவர்களுக்கு எல்லாம் அவர்கள் விரும்பிய பெயரே அந்தந்த மாநிலங்களுக்கு சூட்டப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டிற்கு மட்டும் ‘மதராஸ்’ என்ற பெயரே மாற்றமின்றி தொடரும் என்றானது. ஆனால், தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்ற கோரிக்கையும், போராட்டங்களும் தொடர்ந்து தமிழகத்தில் நடந்தது. இந்த வகையில் தமிழ்நாடு பெயர் கோரிக்கைக்காக விருதுநகரில் சங்கரலிங்கம் என்ற 76 வயது தமிழ் போராளி 78 நாட்கள் தொடர்ந்து மனஉறுதியுடன் உண்ணாவிரதமிருந்து தன் இன்னுயிரை நீத்தார். அவரது தியாகம் வீண்போகவில்லை. அறிஞர் அண்ணா முதல்-அமைச்சராக பதவியேற்று 1967-ம் ஆண்டு ஜூலை 18-ல் மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார்.

No comments: